Skip to main content

“15,300 மின்வாரிய ஊழியர்கள் தயார்..” - அமைச்சர் தங்கம் தென்னரசு 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

"15,300 Power Board employees are ready.." - Minister Thangam Thanarasu

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் இருந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

 

இது புயலாக மாறும்போது அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது; “அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் மின் கம்பங்கள் தயாராக இருக்கின்றன. மாவட்ட கட்டுப்பாட்டு மையங்களில் மின் துறை அலுவலர்கள் களப் பணியாற்றி வருகின்றனர். புயல் கரையைக் கடக்கும்போது கடலோர மாவட்ட மக்களுக்கு மின் விநியோகம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மின்னகத்திற்கு வரும் அழைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 15,300 மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Tamil Nadu government case against central government

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த்தையும், திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டினையும் ஆதரித்து நாங்குநேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tamil Nadu government case against central government

அப்போது அவர் பேசுகையில், “இரண்டு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் பிச்சை என்று ஏளனம் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

Tamil Nadu government case against central government

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமனன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.