Skip to main content

லோன் செயலியால் தற்கொலை... உயிரைப் பறித்த 1,500 ரூபாய் ஆன்லைன் கடன் பாக்கி!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

1,500 rupees debtor who took his life!

 

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சென்னை மணலியை சேர்ந்த ஐடி பெண் ஊழியர், கரூரில் ஒரு மாணவர் என இரண்டு பேர் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் லோன் செயலியால் தற்கொலை செய்து கொண்டது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த சம்பவத்தில் 1,500 ரூபாய் பணத்திற்காக புகைப்படமானது ஆபாசமாக சித்தரிக்கப்பட்டதால் 29 வயது இளைஞர் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞர் பாண்டியன். பட்டதாரி இளைஞரான இவர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் இருந்த பாண்டியன் செலவிற்காக ஆன்லைன் லோன் ஆப்பை டவுன்லோட் செய்து அதன் மூலம் 5,000 ரூபாய் கடன் பெற்று இருக்கிறார். கடன் தொகையில் 1,500 ரூபாயை செலுத்தாத நிலையில் பணத்தை கட்டுமாறு, லோன் ஆப் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. தொடர்ந்து இவர் பணத்தை கட்டாமல் இருந்ததால் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாட்சப் எண்ணிற்கு அனுப்புவோம் என மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

சொன்னபடியே அவதூறு பரப்பும் வகையில் பாண்டியனின் புகைப்படத்தை சித்தரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு லோன் ஆப்  அனுப்பியுள்ளது. பாண்டியனே தவறான தொழிலுக்கு அழைப்பதுபோல் ஆபாசமாக சித்தரித்து பலருக்கு சமூகவலைதளம் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து பாண்டியன்  மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் பிரச்சனை ஏற்பட, பெற்றோரும் பாண்டியனை கண்டித்துள்ளனர். இதனால் பெற்றோர் முன்பே அறைக்குள் புகுந்து கொண்டு கதவை தாழிட்டுக் கொண்ட பாண்டியன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்