1500 kg Gutka hoarded in a godown near Andhiyur; 4 people arrested

அந்தியூர் அருகே 1500 கிலோ குட்கா குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தியூர் - பவானி ரோடு, செம்புளிச்சாம்பாளையம் பகுதி, கற்பகம் நகர், 3வது குறுக்கு வீதியில் உள்ள ஒரு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாகப்பதுக்கி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisment

தகவலின் பேரில் போலீசார் குடோனுக்குள் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த சிலர் குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாகக் கட்டி அங்குள்ள லோடு வேனில் ஏற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அஜித் (23), சேலம் மாவட்டம் ஓமலூர் திமிரி கோட்டை ராமன்பட்டியைச் சேர்ந்த மணி (30), சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (42), கார்த்தி (20) எனத்தெரிய வந்தது.

போலீசார் குடோனில் மேற்கொண்ட சோதனையில் 85 மூட்டையில் 1500 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும். இந்த குடோனின் உரிமையாளர் பவானியைச் சேர்ந்த ரவி எனத்தெரிய வந்தது. ரவி தலைமறைவு ஆகிவிட்டார். வெளியிடங்களிலிருந்து குட்கா கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜித், மணி, செல்வம், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் குடோன் உரிமையாளர் ரவியை தேடி வருகின்றனர். ரவி சிக்கினால் தான் குட்கா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது எங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என முழு விவரம் தெரிய வரும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேன் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 1500 கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.