லஞ்சம் வாங்கியவருக்கு சிறை விதித்த நீதிமன்றம்

15 years of struggle; The court sentenced  prison to  the bribe taker

திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இந்திரா நகரைச்சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் திருச்சி குண்டூரில் தான் வாங்கிய வீட்டுமனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு, 16.10.2007 ஆம் தேதி திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள சர்வே செக்சனில் துணை சர்வே வட்ட ஆய்வாளர் கணேசமூர்த்தியை அணுகியுள்ளார். சக்கரவர்த்தியின் வீட்டுமனை சர்வே ரிப்போட்டை தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கணேசமூர்த்தி ரூ. 1000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்கரவர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனையின் பேரில் சக்கரவர்த்தி கணேசமூர்த்தியிடம் லஞ்சம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணேசமூர்த்தியை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்க சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இதில் கணேசமூர்த்திக்கு ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7 கீழ் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சட்டப்பிரிவு 13(2) உடன் இணைந்த13(1)(ஈ)ன் கீழ் 3 வருடம் கடுங்கால் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் ஆஜரானார்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe