
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் தனியாக இருந்த வீட்டில் வசித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி இளைஞர் ஒருவரால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை மைதானத்தின் பின் பகுதியில் தனியாக உள்ள வீட்டில் சிறுமிகள் இருவர் இருந்துள்ளனர். வீட்டுக்குள் வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் சிறுமிகள் இருவரையும் தாக்கியுள்ளார். இதில் 10 ஆம் வகுப்பு சிறுமி ஜனனி(15) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலில் லக்ஷியா என்ற மற்றொரு 16 வயது சிறுமி படுகாயமடைந்தார். பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பமுயன்ற நிலையில் கத்தி கூச்சல் இட்டுள்ளனர். இதனால் ஓடிவந்த சிறுமியின் உறவினர்கள் கொலை செய்த இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
16 வயது சிறுமி லக்ஷியா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கொலை நடந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட நபரின் வயது 25 லிருந்து 30 இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கும் கொலை செய்த இளைஞருக்கும் இடையே ஏதேனும் முன் அறிமுகம் உள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தா நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். சோளிங்கரில் தனியாக இருந்த வீட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.