Skip to main content

‘இஸ்ரேலில் 15 தமிழர்கள்’ - தமிழக அரசு தகவல்

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

 15 Tamil people in Israel says Tamil Nadu Government Information

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் சூழல் நிலவும் நிலையில் இஸ்ரேலில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர்.

 

இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றித் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெஸிந்தா லாசரஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்ரேலில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் அயலகத் தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டனர். 15 தமிழர்களும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது” எனத் தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்