Advertisment

15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை; 500 கோடி ரூபாய் மோசடி வழக்கில் திருப்பம்!

15 lakh page charge sheet against real estate owner

சேலத்தில், ரியல் எஸ்டேட் அதிபர் வின் ஸ்டார் சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர்மீதான மோசடி வழக்கில் 15 லட்சம் பக்கங்கள் கொண்டகுற்றப்பத்திரிகை டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

Advertisment

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, வின் ஸ்டார் இண்டியாசிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். நிலத்தில் முதலீடு செய்தால் 11 மாதத்தில் இரட்டிப்பு விலை கொடுத்து நாங்களே நிலத்தை வாங்கிக் கொள்கிறோம் அல்லது அதற்கு நிகரானலாபத்தைக் கொடுத்து விடுவதோடு, அசல் முதலீட்டையும் கொடுத்து விடுகிறோம் என்று பல்வேறு விதமான கவர்ச்சி அறிவிப்புகளை வின்ஸ்டார் நிறுவனத்தார் வெளியிட்டனர். ஒருகட்டத்தில், எம்எல்எம் முறையிலும் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தினர்.

Advertisment

கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி 4000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் வின் ஸ்டார் நிறுவனத்தில் முதலீடுகளை கொட்டினர். இத்துடன்நில்லாமல் வின் ஸ்டார் பெயரில் ஜவுளிக்கடை, உள்ளூர் கேபிள் டிவி, ஸ்வீட் கடைகள், ஜவுளிக்கடை, பட்டாசு தொழில், நெல்லிச்சாறுவிற்பனை உள்ளிட்ட தொழில்களிலும் இறங்கினார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஓரளவு லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் அவர் தொடங்கிய மற்ற தொழில்களிலும் முதலீடு செய்தனர். இந்நிலையில், திடீரென்று சிவக்குமார் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். முதிர்வு காலத்திற்குப் பிறகும் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினார்.

இதையடுத்து அவர் மீது 1686 முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து, கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த சேலம் பொருளாதாரகுற்றப்பிரிவு காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்தனர். அவர் உட்பட 30 பேருக்கு இந்த மோசடியில் பங்கிருப்பதும், 500 கோடிரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது.முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, கடந்த2018ம் ஆண்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராசு தலைமையில் இந்த வழக்கை விசாரிக்கஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் விசாரணையில், முதலீட்டாளர்களிடம் சுருட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொண்டு சிவக்குமார் தமிழ்நாடுமுழுவதும் பல மாவட்டங்களில் நிலங்களையும், வீடுகளையும் வாங்கிக் குவித்து இருப்பது தெரிய வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் விசாரணை முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது சிவக்குமார்உள்ளிட்ட 30 பேர் மீதும் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதற்காக ஒரு நபருக்கு 50 ஆயிரம் பக்கங்கள் வீதம், குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 பேருக்கும் மொத்தம் 15 லட்சம் பக்கங்களில் குற்றப்பத்திரிகைதயாரிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை ஆவணங்களை நகல் எடுப்பதற்காகவே 14 லட்சம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

இந்த வழக்கு, டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி முன்பு குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன்சேலத்தில் இருந்து அக். 2ஆம் தேதி டான்பிட் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தமிழகத்தில், ஒரு மோசடி வழக்கில் முதன்முதலாக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Salem police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe