
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆண்டிமடம் வட்டாரக் கிளை சார்பில் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந்தித்து மாணவர்கள் நலனைக் கருதி முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதில், ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் கட்டடங்களையும் ஆய்வுசெய்து, பழுது நீக்கம் செய்ய வேண்டிய கட்டடத்தைப் பழுது நீக்கம் செய்து தரக் கோரியும், இடித்து அகற்றப்பட வேண்டிய கட்டடங்களை இடித்து அகற்றி, மாணவர் நலன் மற்றும் பள்ளி நலன் காத்திட கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் மாவட்டத் தலைவர் அசோகன், வட்டாரத் தலைவர் வரதராசன், வட்டாரப் பொருளாளர் ஜான்சன், மாவட்ட துணைத்தலைவர் மோகன்தாஸ், வட்டார துணைச் செயலாளர் ராமன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மணி முருகன், வட்டார துணைச் செயலாளர் மகளிர் திருமதி கண்ணகி, வட்டார துணைத்தலைவர் மகளிர் உபகாரம்மாள், தலைமையாசிரியர் இரத்தினலூர்துசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினரும் ஆண்டிமடம் வட்டாரச் செயலாளருமாகிய வேல்மணி கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார். 15 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து அனைத்துப் பணிகளையும் முடித்து தருவதாக உறுதி கூறினார்கள்.