
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் துவங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா உட்பட 8 முக்கிய மசோதாக்கள் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் கூட்டுறவு வங்கியில் 12,110 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரப் பணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இன்று (09.02.2021) ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் பேசிய தமிழக முதல்வர், இன்னும் 15 நாட்களில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக அரக்கோணத்தில் பேசிய முதல்வர், ''ஆட்சியில் இருக்கும்போது மக்களைச் சந்திக்காமல் தேர்தலின்போது மக்களை ஸ்டாலின் சந்திக்கிறார். நேரடியாக விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வர மறுக்கிறார்'' எனப் பேசினார்.