/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dogbiteni.jpg)
தமிழகத்தின் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரத்தில் வளர்ப்பு நாய்களால் பல இளம் குழந்தைகள் கடித்து குதறப்பட்டுள்ளனர். அதை போல் கிராமப்புறங்களிலும் தெருவில் சுற்றி தெரியும் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் நேற்று (11-06-24) தெரு நாய் கடித்து 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பரபரப்பான நகரமான திருக்கோவிலூரில் சுற்றி உள்ள கிராம மக்கள் இந்த நகரத்திற்கு தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வந்து செல்கிறார்கள். மேலும், இந்த ஊரில் 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இவ்வாலய பெருமாளை தரிசிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினசரி வந்து செல்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்த ஊரில் உள்ள மருத்துவமனை சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மும்முனை சந்திப்பு பகுதியில் நேற்று மதியம் இளைஞர்கள் பெண்கள் முதியவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்கள் அங்கே பல்வேறு பணிகளுக்காக வந்திருந்தனர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று அவர்களில் 14 பேர்களைக் கடித்துக் குதறியது. இதில் விளந்தை கிராமத்தைச் சேர்ந்த முதியவர் 72 வயது ராஜகோபால், ஆளூர் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது சசிகலா, 48 வயது விஜயா, முடியநூர் கிராமத்தைச் சேர்ந்த 53 வயது ரமேஷ், பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 63 வயது அஞ்சாமணி, திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது வள்ளி, மேல் வாளை கிராமத்தைச் சேர்ந்த 53 வயது சுப்பிரமணி, ஜம்பை கிராமத்தைச் சேர்ந்த 62 வயது மாயவன், வடமருதூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ரஞ்சனி, சைலம் பகுதியை சேர்த்த 24 வயது சதீஷ், கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பிரீத்தி, நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதில் விஜயசாந்தி, எல்லை கிராமத்தைச் சேர்ந்த 72 வயது வேளாங்கண்ணி, திருக்கோவிலூர் நகரை சேர்ந்த 15 வயது தர்ஷநாதன் இப்படி சுமார் 14 பேர்களை கடித்து குதறி விட்டு அந்த நாய் பறந்து ஓடிவிட்டது.
கடிபட்ட அனைவரும் வலியால் துடித்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதா, நகராட்சி ஊழியர்கள் பலரையும் அழைத்து 14 பேரைகடித்து குதறிய அந்த நாயை பிடிப்பதற்கு உத்தரவிட்டார். நகராட்சி ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தேடி அலைந்து அந்த வெறி நாயை விரட்டிச் சென்று பிடித்தனர்.
மேலும், அந்த நாயை பத்திரமாக வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். நாய் கடித்து 14 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அந்த மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரம், கிராமம் என்றில்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்க வேண்டும் என்றும் கண்டபடி சுற்றித் திரியும் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாமல் தடுப்பதற்கு கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் நாய்க்கடிக்கு தமிழக அரசு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார்கள் .
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)