13 lakh fraud to maize trader; Case against 2 people including Coimbatore woman!

ஆத்தூர் அருகே, மக்காச்சோள வியாபாரியிடம் 13.20 லட்சம் ரூபாய் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த பெண் உள்பட இருவர் மீது சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் கோபி (29). ஆத்தூரில் மக்காச் சோளத்தை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர், சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

Advertisment

அதில் கூறியிருப்பதாவது:கோவை உக்கடத்தைச் சேர்ந்த ரியாஸ், காவியா ஆகியோர் மக்காச்சோளம் வாங்குவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னுடைய நிறுவனத்திற்கு நேரில் வந்தனர். பேரம் படிந்ததை அடுத்து, 13.20 லட்சம் ரூபாய்க்கு மக்காச் சோளத்தை வாங்கிச் சென்றனர். இதற்காக முதல் தவணையாக 5.80 லட்சம் ரூபாய் காசோலையாக கொடுத்தனர். பின்னர் அந்த காசோலையில் பணம் எடுக்க முடியாத வகையில் வங்கியில் சொல்லி, 'ஸ்டாப் பேமென்ட்' செய்து கொண்டனர். அதன்பிறகு அவர்கள் எனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப் பிரிவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கோபியிடம் மக்காச்சோளம் வாங்கிவிட்டு ரியாஸும், காவியாவும் உரிய பணத்தைத் தராமல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, தலைமறைவாகிவிட்ட அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment