
திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காந்திமார்க்கெட், பாலக்கரை, கோட்டை, எடமலைப்பட்டிப்புதூர், கே.கே.நகர் மற்றும் கண்டோன்மெண்ட் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்களிடம் செல்போன்களை திருடிய குற்றங்களில் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து, குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி செயின் பறிப்பு மற்றும் செல்போன்களை திருடுவது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆய்வாளர்கள் தலைமையில் புலன்விசாரணை செய்துவந்தனர்.
இந்நிலையில், திருச்சி மாநகரத்தில் செல்போன்களை திருடிய சஞ்சீவி, அபுதாகீர், அஜ்மத் அலி ஆகியோர் காந்திமார்க்கெட் பகுதியிலும், கார்த்தி (எ) பல்லு கார்த்தி, ஜாக்கி (எ) பிரசாந்த், ஜெயசீலன் ஆகியோர் பாலக்கரை குட்ஷெட் ரயில்வே மேம்பாலம் மற்றும் கே.கே.நகர் பகுதியிலும், இப்ராஹிம் (எ) இட்லி, சபீர், ஜாபர்சாதிக், காதர் ஆகியோர் கோட்டை பகுதியிலும், லதா, ராமு (எ) ராஜி ஆகியோர் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியிலும், குணசேகரன் என்பவர் கண்டோன்மெண்ட் பகுதியிலும் கைது செய்யப்பட்டனர்.