
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 3,324 மையங்களில் நடந்த இந்த பொதுத்தேர்வை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம் 50,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தவுடன் மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது.
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிடவுள்ளார். இதையடுத்து மாணவர்கள் பயின்ற பள்ளி மற்றும் இணைய தளங்கள் (www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in) வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.