/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bikes4434.jpg)
சேலம் மாவட்டத்தில் சாராய கடத்தல் குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 127 வாகனங்கள் மார்ச் 23- ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 6, ஆட்டோ 1, இருசக்கர வாகனங்கள் 120 என மொத்தம் 127 வாகனங்களை மதுவிலக்குப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பெரும்பாலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் வழக்கு முடிந்த பிறகு, அவை பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு விடுவது நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன்படி, மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் மார்ச் 23- ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன. காலை 10.00 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் மார்ச் 21, 22- ஆம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை வாகனங்களைப் பார்வையிடலாம்.
இருசக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாயும், இதர வாகனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துக் கொள்ள முடியும்.
ஏலம் எடுத்தவுடன் வாகனத்திற்கு உரிய தொகையை ஜிஎஸ்டி வரியுடன் முழுமையாக செலுத்தி, வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. அலுவலகத்தை நேரில் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு சேலம் மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)