/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krish (1)_0.jpg)
அரசுப்பள்ளிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த 12 ஆயிரம் பாடப்புத்தகங்கள் மாயமானது குறித்து, வட்டாரக் கல்வி அலுவலக ஊழியர்கள் இருவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர் மாதம்மாள் (வயது 56). கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் 29- ஆம் தேதி, கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 4- ஆம் தேதி, தமிழக அரசு பாடநூல் கழகம் சார்பில் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, 29,265 புத்தகங்கள் அந்த அலுவலகத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு இருந்ததும், அவற்றில் 12 ஆயிரம் புத்தகங்கள் காணாமல் போயிருப்பதும் தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு 1.80 லட்சம் ஆகும்.
இதுகுறித்து கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி, ஊத்தங்கரை காவல்நிலையத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் மாதம்மாள் புகார் அளித்தார்.அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆவணக் காப்பக எழுத்தராகப் பணியாற்றி வரும் தங்கவேல், இளநிலை உதவியாளர் திருநாவுக்கரசு ஆகிய இருவரும்தான் பாடப்புத்தகங்கள் காணாமல் போனதற்கு பொறுப்பு என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வட்டாரக் கல்வி அலுவலர் மாதம்மாள் காவல்நிலையத்தில் ஜூலை 29- ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் அவர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)