
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நிலையில், கூட்டம் தொடங்கியது முதலே அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரண்டுமுறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள், தொடர்ந்து முழக்கத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், காங்கிரஸ்,சிபிஎம், சிபிஐ, திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் அறிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் இந்த அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், " இது மிகவும் கண்டத்துக்குரியது, இந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.