ADVERTISEMENT

பெரும்புள்ளிகளைக் குறிவைத்து ஆள்கடத்தும் கும்பல்... 12 லட்சம் ரூபாய், 40 பவுன் நகைகள் மீட்பு!

04:53 PM Oct 03, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேச பாண்டியன் மகன் சரவணகுமார். ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் இவர் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலும் தொழிலை விரிவுபடுத்தி இருக்கிறார். கடந்த செப். 9 அன்று சரவணகுமார் தனது காரில் கோவில்பட்டி மந்தித்தோப்பைச் சேர்ந்த டிரைவர் சேதுபதியுடன் நெல்லைக்குப் பத்திரப்பதிவு செய்வதற்காகக் கிளம்பிச் சென்றுள்ளார். நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகேயுள்ள சன்னது புதுக்குடியருகே காரை நிறுத்திய டிரைவர் சேதுபதி இயற்கை உபாதையைக் கழிக்க இறங்கி போயுள்ளார். அது சமயம் 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் கத்தியுடன் காருக்குள் ஏறி சரவணக் குமாரை மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் செயின், 3.5 பவுன் கை செயின், 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்ஃபோன்களை பறித்துக்கொண்டு அவரைக் கடத்திச் சென்றனர்.

அதன் பின் அவரது தந்தை முருகேச பாண்டியனைத் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம். அவர் உயிருடன் திரும்ப வேண்டுமென்றால் 1 கோடி தரவேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பதறிப்போன முருகேச பாண்டியன், தன்னிடம் 12 லட்சமே இருப்பதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து கடத்தல்காரர்கள் 12 லட்சத்தையும், 50 பவுன் நகையையும் கொண்டுவர வேண்டுமென்று மிரட்டியுள்ளனர். அதையடுத்து முருகேச பாண்டியன் தன்னிடமிருந்த 12 லட்சம், 40 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு வருவதாக தன் மகனின் செல்லிற்குப் பேசியுள்ளார். அதன் பின் கடத்தல் காரர்கள் பணம், நகைகளை சன்னது புதுக்குடியின் முட்புதரில் வைத்துவிட்டுப் போகச் சொல்ல அவரும் அப்படியே செய்துள்ளார். அங்கு பைக்கில் நின்றிருந்த இருவருடன் காரில் இருந்த 3 பேர் வந்து முருகேச பாண்டியன் புதரில் வைத்துவிட்டுச் சென்ற நகை மற்றும் பணங்களை எடுத்துக்கொண்டவர்கள், சரவணகுமாரிடம் இதுகுறித்து வெளியே அல்லது போலீசிடம் சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சரவணக் குமார் கயத்தாறு காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். இதையறிந்த மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார் உத்தரவின்படி, கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியனின் கண்காணிப்பில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு புகார் குறித்து விசாரணை செய்தவர்கள் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். விசாரணையின்போது கயத்தாறு சமீபம் உள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த சங்கிலிபாண்டியன், செல்வம், கோவில்பட்டியின் மாடசாமி, பொன்ராஜ், பொன்கார்த்திக் உள்ளிட்டோர் ஆள்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில் சரவணக் குமாரின் கார் டிரைவர் சேதுபதி சரவணக்குமார் பற்றிய தகவல்களை அவ்வப்போது கடத்தல் கும்பலுக்குத் தெரிவித்திருக்கிறார். மேலும் காரில் அவரை அழைத்து கொண்டு வரும்போது சம்பவ இடத்தில், தான் சிறுநீர் கழிப்பதற்காகக் காரை நிறுத்துவதாகவும், அங்குத் தயாராக 3 பேரை நிறுத்திக் கடத்தல் மற்றும் கொள்ளையடிப்பிற்குத் திட்டம் தீட்டியதாகத் தெரியவந்ததுடன் இந்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டது கார் டிரைவர் சேதுபதி என்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து தனிப்படையினர் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 14 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் நகைகள், கொள்ளையடித்ததில் ரொக்கம் 6 லட்சம் அடுத்து கொள்ளை பணத்தில் வாங்கிய 75 ஆயிரம் மதிப்புள்ள பைக், கொள்ளைக்குப் பயன்படுத்திய இரண்டு பைக்குகள் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டதைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார், இந்த சம்பவத்தில் தீவிரமாகச் செயல்பட்டு குற்றாவாளிகளைக் கைது செய்து நகைகள் மற்றும் பணத்தை மீட்ட தனிப்படையினரைப் பாராட்டியதுடன் வெகுமதியும் வழங்கினார். பெரிய லெவலில் பெரும்புள்ளியைக் கடத்தி லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்த ஆள்கடத்தல் சம்பவம் கோவில்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT