Skip to main content

தேர்வால் ஏற்பட்ட விரக்தி; பள்ளி மாணவியின் விபரீத முடிவு!

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

11th standard class student lost their life due to not writing the exam properly

 

சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகள் எந்த ஒரு காரணத்திற்காகவும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் மாடியில் இருந்து குதித்துவிடும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது பெற்றோர்களை ரொம்பவே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த ஆடிட்டர் செல்வக்குமாருக்கு மனைவி மற்றும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் குப்பகோணத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இளைய மகள் தரண்யா (17) அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +1 பயோ மேத்ஸ் படிக்கிறார். மகனும் அதே பள்ளியில் சிபிஎஸ்இ 3ம் வகுப்பு படிக்கிறார்.

 

+1 மாணவி தரண்யா கடந்த 20ந் தேதி நடந்த இயற்பியல் பாடம் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து தேர்வு சரியாக எழுதவில்லை என்று விரக்தியில் பேசியவரை பெற்றோர் ஆறுதல் கூறி அமைதியாக்கி உள்ளனர். ஆனால், அந்த மன உளைச்சலில் இருந்து மீளாத நிலையிலேயே நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் உயிரியல் பாடங்களை படித்துக் கொண்டிருந்தவர் முதல் மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார்.

 

சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து தலையில் அடிபட்டு மயங்கிக் கிடந்த தரண்யாவை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துவிட்டிருந்தார். மாணவியின் இந்த விபரீத முடிவால் ஊரே சோகத்தில் உள்ளது. உறவினர்கள் கதறித் துடிக்கின்றனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசார் விசாரணை செய்து வரும் நிலையில், மாணவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.