Skip to main content

சேலம் சரகத்தில் 1,168 பதற்றமான வாக்குச்சாவடிகள்!

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

 1168 tense polling stations in Salem

 

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் 1,168 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இதையடுத்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.

 

இதற்கிடையே, தேர்தல் அதிகாரிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து, பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் 10,227 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

 

இவற்றில் 1,168 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவை முழுமையாக தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்கும். சேலம் மாநகர் மற்றும் சரகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட தலா ஒரு கம்பெனி துணை ராணுவ காவல்துறையினர் வந்துள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ளூர் காவல்துறை கண்காணிப்பும் கூடுதலாக போடப்படும்.

 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 242 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 240 வாக்குச்சாவடிகளும், தர்மபுரியில் 400 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணகிரியில் 286 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இந்தப் பட்டியலில் உள்ள வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். வாக்காளர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்படும்,'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்