Skip to main content

இரவில் உணவு தேடி வந்து கிணற்றில் விழுந்த 11 காட்டுப் பன்றிகள்!

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

11 wild boars fell into the well in search of food at night

 

ஜவ்வாது மலையின் வடக்கு பகுதி அடிவாரத்தில் பல கிராமங்கள் உள்ளன. குறிப்பாக வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதி அதிகமான வனப்பகுதிகளைக் கொண்டது. இந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளான கரடி, காட்டுப் பன்றி, மான், இடம் மாறி வரும் யானைகள் அடிக்கடி உணவுகளைத் தேடி காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் வந்து உணவு சாப்பிடுவது வழக்கம்.

 

ஒடுகத்தூர் அடுத்த அத்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 30 அடி ஆழம் கொண்ட தரை கிணறு உள்ளது. தினமும் காலை, மாலை நிலத்திற்கு சென்று வருவது ரமேஷின் வழக்கம். நவம்பர் 13 ஆம் தேதி தனது நிலத்தை பார்க்கச் சென்றபோது, தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை காட்டுப் பன்றி ஒன்று சுற்று சுற்றி வந்துள்ளது. அதோடு ஏக்கமாக குரல் தந்துள்ளது காட்டுப்பன்றி. இவர் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது, கிணற்றுக்குள் காட்டுப் பன்றிகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே குரல் கொடுக்க அக்கம்பக்கம் விவசாய நிலத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து பார்த்துள்ளனர். இரவில் வழக்கம்போல் உணவு தேடி ஓடிவரும்போது தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றில் விழுந்துள்ளது.

 

காட்டுப் பன்றிகள் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடுவதாக ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர் விவசாயிகள். உடனே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், காட்டுப் பன்றிகளை கிணற்றில் இருந்து காப்பாற்றி மேலே கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர். காட்டுப் பன்றிகளை மீட்கும்போது மனிதர்கள் தங்களைப் பிடித்துக் கொல்ல வருகிறார்கள் என நினைத்தோ என்னவோ காப்பாற்ற முயன்ற தீயணைப்புத் துறையினரை விரட்டி கடிக்க முயன்றதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. வனத்துறை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் ஒருவழியாக சுமார் 3 மணி நேரம் போராடி கிணற்றில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த 11 காட்டுப் பன்றிகளை உயிருடன் மீட்டு அருகே இருந்த காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்