11 people confirmed to be infected with Corona in Tiruvallur district

கடந்த 2 வருடங்களுக்கு மேலாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதாவது சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பரவி வரும் கொரோனா, தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாகக் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாடு முழுவதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

அதே சமயம் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பூவிருந்தவல்லியில் 10 பேருக்கும், திருவள்ளூரில் ஒரு நபருக்கும் என மொத்தமாக 11 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் தற்போது பரவி வரும் கொரோனா வீரியம் குறைந்தது என்பதால் உரியச் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்பட்டு 11 பேரும் விரைவில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

முன்னதாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்களுக்கு 4 படுக்கைகள், பெண்களுக்கு 4 படுக்கைகள் என 2 தனித்தனி அறைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து மருந்துகளும் இங்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.