கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் முழுவதும் குணமடைந்ததை அடுத்து, வியாழனன்று (மே 7) அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கொஞ்சமும் தணியாத நிலையில், பாதிப்புக்கு உள்ளானவர்கள் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்புவதும் கணிசமாக அதிகரித்துள்ளதால், நோய்த்தொற்றாளர்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், நாமக்கல்லைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 41 பேர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தும் வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கொரோனா தொற்றாளர்கள் 24 பேர் பூரண குணமடைந்ததை அடுத்து, ஏற்கனவே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4, தர்மபுரியைச் சேர்ந்த ஒருவர் என மேலும் 10 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் வியாழக்கிழமை (மே 7) மருத்துவமனையில் இருந்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன் மற்றும் மருத்துவமனை இதர மருத்துவர்கள், செவிலியர்கள் வரிசையில் நின்று அவர்களுக்காக உற்சாகமாக கரவொலி எழுப்பி அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் கூட அவர்கள், தங்கள் வீடுகளில் மேலும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் தொர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இவர்கள் பின்பற்ற வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தினர். கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், ''சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 9804 குடும்பங்கள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 3426 பேர், நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள், சிகிச்சைக்காக வரும் உள், வெளி நோயாளிகள் என இதுவரை 93914 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் வகையில் கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது,'' என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை முடிந்து பத்து பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், தர்மபுரியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் சேலம் அரசு மருத்துவமனை தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.