1000-year-old Impon statues discovered near Manachanallur

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்து அதற்காக பணியாட்களை வரவழைத்து பணியைத் தொடங்கியுள்ளார். சுமார் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியபோது, சிலைகள் தென்பட்டு உள்ளது.

அடுத்தடுத்து 3 சிலைகள் தென்பட்டதால் உடனே இதுகுறித்து மணச்சநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு சுரேஷ் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மண்ணச்சல்லூர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் அங்கு விரைந்தனர். சிலைகளை ஆய்வு செய்த போது அவைகள் ஐம்பொன்னாலான பெருமாள், ஸ்ரீதேவி, மூதேவி சிலை என்பது தெரிய வந்தது. அதனுடன் மீட்கப்பட்ட பொருட்கள் சாமிக்கு பூஜைகள் செய்யப் பயன்படுத்தப்படும் செப்பு பொருட்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்பது வட்டாட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சிலைகளை கைப்பற்றி எடுத்துச் சென்று உள்ளனர். இதற்கிடையில் பூமிக்கடியில் பழமையான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து சிலையை தரிசனம் செய்து சென்றனர்.