Skip to main content

ஆதிதிராவிடர்களுக்கு பட்டா வழங்கிய அரசு; எதிர்ப்பு தெரிவிக்கும் மாற்றுச் சமூகம்!

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

100 of people gathered on thiruvallur collector office

 

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த இலட்சிவாக்கம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இதற்கு இலட்சிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த பெரம்பூர் பகுதி மாற்றுச் சமூகத்தினர்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருவதால், 24 மணி நேரமும் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இரு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் மீதும் தாக்குதல் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள மாற்றுச் சமூகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று கூடி தர்ணா போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அவர்கள், ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இலவச பட்டாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாற்று இடத்தில் பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மேலும், உடனடியாக பட்டாவை ரத்து செய்யவில்லை எனில் கிராமத்தில் உள்ள அனைவரும் தங்களது குடியிருப்பு சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்