
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கள்ள சாராய வேட்டையில் 100 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பிடித்து அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில், தமிழக அரசின் கரோனா பொதுமுடக்க உத்தரவில் மதுக்கடைகள் மூடியதையடுத்து கிராம பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற போலீஸார் ஆய்வில் 355 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு நிகழ்விடத்திலேயே அழிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காவல் துணைக்கண்காணிப்பாளர்(பொ) எம்.பால்சுடர் உத்தரவின்பேரில் மணப்பாறை காவல் உதவி ஆய்வாளர் சதீஸ்குமார் தலைமையிலான போலீஸார் நடத்திய கள ஆய்வின்போது மேல தொப்பம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த 100 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு நிகழ்விடத்திலேயே அழிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியினை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி(33), செல்வம் மகன் பொன்னுச்சாமி(28), சின்னப்பன் மகன் அழகர்சாமி(26) மற்றும் செட்டியப்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் ராமராஜன்(25) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்துள்ள மணப்பாறை போலீஸார் அவர்களிடமிருந்து இரண்டு இருச்சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.