/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH COURT 2_26.jpg)
நூறு நாள் வேலைத்திட்டம், தொகுப்பு வீடு உள்ளிட்ட திட்டங்களில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சாணாபுத்தூர் கிராமத்தில் தொகுப்பு வீடு, கச்சா வீடு மற்றும் கழிவறைகள் கட்டுவதில், மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளதாக கூறி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, சாணாபுத்தூரை சேர்ந்த கே.விஜய் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், சாணாபுத்தூர் நகராட்சி செயலாளர் பிர்லா, நூறு நாள் வேலைத் திட்டம், கச்சா வீடு மற்றும் தொகுப்பு வீடு திட்டங்களின் கீழ், போலி பயனாளிகள் பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்பி, பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சி துறை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய புகார் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சித்துறை செயலாளர், திருவள்ளூர் கலெக்டர், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கிராம வளர்ச்சித் துறை இயக்குநர், கும்மிடிப்பூண்டி நகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
Follow Us