Skip to main content

10 ஆண்டு கால போராட்டம்.. ஐபிசி 377 நீக்கம்!!

Naas Anjali_gopalan


மாற்று பாலின மற்றும் பால் ஈர்ப்பு கொண்ட மக்களின் இருப்பு மற்றும் சுயமரியாதையை உறுதி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இதற்காக 10 ஆண்டு காலம் போராட்டம் நடத்தியிருக்கின்றனர் வானவில் கூட்டணி. ‘சென்னை பிரைட்,’ ‘ஓரினம்’, ‘நிறங்கள்’ உள்ளிட்ட 18 என்.ஜி.ஓக்களின் கூட்டமைப்பு தான் வானவில் கூட்டணி. அதாவது ஓரினச் சேர்கையாளர்களும், அவர்களை ஆதரிப்பவர்களின் சங்கமமே வானவில் கூட்டணி.

ஆண் ஆணுடன் உறவு கொள்வது, பெண் பெண்ணுடன் உறவு கொள்வது தவறில்லை என்பது இவர்களது வாதம். அது எங்களது உரிமை என போர்க்கொடி தூக்கும் இவர்கள், தங்களது சுயமரியாதையை நிலைநாட்டும் விதமாக கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி நடத்தி உள்ளனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என தீர்ப்பு வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம். இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவில், யாரேனும் ஒரு ஆண் மற்றொரு ஆண், பெண் மற்றொரு பெண் அல்லது விலங்கினத்துடன் இயற்கைக்கு விரோதமாகப் புணர்வது தவறென்றும் மீறுவோர்க்கு ஆயுள் சிறைத்தண்டனை வழங்கலாமென்றும் உள்ளது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்து ‘நாஸ் நிறுவனம்’ தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம், வயது வந்த இருவர் பாலுறவில் ஈடுபடும் விருப்புரிமையை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாதென்று 2009-ல் அறிவித்த தீர்ப்பு வரவேற்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு டிச.11 2013 அன்று நீதிபதிகள் முகோபாத்யாயா - ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய அமர்வு பின்வருமாறு தீர்ப்பை வெளியிட்டது.

அதாவது, "இயற்கையின் ஒழுங்கிற்கு எதிராக எந்த ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகத்துடனோ தன் விருப்பப்படி உடலுறவுக் கொள்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையுடன் அபராதமும் கட்டுவது ஆகிய தண்டனைக்கு உட்பட வேண்டும்." இந்த தீர்ப்பை எதிர்த்து, நாஸ் அறக்கட்டளை உள்பட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர், இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு செப்.06-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டது. அதாவது, சம்மதத்துடன் நடைபெறும் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்றும், இதை குற்றம் என கூறும் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவு அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சம்மதம் இன்றியும், விலங்குகளோடும் உறவு வைத்துகொள்வது தொடார்ந்து குற்றமாகவே கருதப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள திருநங்கைகள், தமிழ்நாடு அரசு அரவாணிகள் நல வாரியத்தை விரிவுப்படுத்தி தமிழ்நாடு திருநர் நலவாரியமாக மாற்ற வேண்டும்.‘அரசு பணிகளிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் திருநர் மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று பாலின பாலீர்ப்பு கொண்ட மக்களுக்கான மனநல ஆலோசனை சேவை மற்றும் ஆதரவு குழுக்களை உருவாக்க வேண்டும். பணியிட சமத்துவம், பாகுபாடின்மை, பாலீர்ப்பு சார்பு மற்றும் பாலின அடையாளம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்திற்கான பன்முகத்தன்மை பயிற்சி வழங்குதல் போன்றவற்றை அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டும் என பெரிய பட்டியலை முன்வைத்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்