'10 years for this; did they think one video was enough?' - Chief Minister M.K. Stalin's criticism

அண்மையில் தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தார். டெல்லியில் ஆம் ஆத்மியை வென்று ஆட்சியைப் பிடித்தது போல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என பேசி இருந்தார்.

சேலத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலளித்துப் பேசுகையில், 'மதுரைக்கு வந்தீர்களே எய்ம்ஸ் மருத்துவமனையை பார்த்தீர்களா? சரியாக நிதி ஒதுக்கி இருந்தால் இந்நேரம் கட்டி முடித்திருக்கலாம். 10 ஆண்டுகளாக கட்ட அது மருத்துவமனையா அல்லது விண்வெளி மையமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் வலைத்தள பக்கத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எப்படி வரும் என்பது தொடர்பாக கற்பனையாக கிராபிக்ஸ் வீடியோ காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதில், 'மதுரைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் #AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!' என விமர்சித்துள்ளார்.

Advertisment