10 year imprisonment, arrest, release case ..! Court postpones verdict without setting date ..!

10 ஆண்டுகள் சிறை தண்டனையைப் பூர்த்தி செய்யாதவரை எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா திட்டத்தில் முன்விடுதலை செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

Advertisment

ஈரோட்டைச் சேர்ந்த ஏ. பழனிசாமி என்பவருக்கு கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் கடந்த 2007ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையை விதித்து ஈரோடு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர், சேலம் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்வது என 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டின் அப்போதைய அரசு முடிவெடுத்தது.

Advertisment

அதில், தான் முன்விடுதலை செய்யப்படாததால், அரசுக்கு உத்தரவிடக் கோரி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பித்த தீர்ப்பில் பழனிசாமியை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசின் உள்துறை தரப்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.என். மஞ்சுளா அகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, 10 ஆண்டு தண்டனை காலத்தைப் பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே அந்த அரசாணை பொருந்தும் எனவும், மனுதாரர் 9 ஆண்டுகள் 24 நாட்களை மட்டுமே தண்டனை அனுபவித்துள்ளதாகவும், அவரை விடுதலை செய்வதற்கு 349 நாட்கள் குறைவாக இருப்பதால் விடுதலை செய்யப்படவில்லை எனவும் வாதிட்டார். தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பு விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் தவறாக சேர்த்துக்கொண்டு பழனிசாமி கோரிக்கை வைப்பதாக சுட்டிக்காட்டினார். எனவே பழனிசாமியை விடுதலை செய்ய வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.