Skip to main content

பத்து ரூபாய் பிரியாணிக்காக அலைமோதிய கூட்டம்! -விரட்டியடித்து கரோனா வழக்கு பதிவு!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020

 

‘துவக்க நாளில், தங்களின் ஓட்டலுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?’ என்று யோசித்த ஜாகிர் உசேன் என்பவர்,  ‘பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி’ என, மக்களின் நாடித்துடிப்பை அறிந்து விளம்பரப்படுத்தினார். அவர் நினைத்தது போலவே, சலுகை விலையில் பிரியாணி கிடைக்கிறது என்பதால்,  கூட்டம் முண்டியடித்தது. பிறகென்ன? காவல்துறையினர்  வந்து விரட்ட வேண்டியதாகிவிட்டது. 

விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில், ’சென்னை பிரியாணி’ என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்தார் ஜாகிர் உசேன்.  அறிமுக சலுகைக் கட்டணமாக, ரூ.10-க்கு பிரியாணி என்று அறிவித்ததால், காலை 10-30 மணிக்கே 50 பேர் வரை வரிசையில் காத்திருந்தனர். பிரியாணி விற்பனை தொடங்கியது. முதலில் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள், பிறகு பொறுமையிழந்து, ஓட்டல் வாசல் முன்பாக, மொத்தமாக குவிந்தனர்.

அது பிரதான சாலை என்பதால், வாடிக்கையாளர்களின் ஆக்கிரமிப்பால்,  போக்குவரத்துக்கு இடையூறாகி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு வழியின்றி தடையேற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த ஓட்டல் நிர்வாகத்தினரும், அவ்வழியே வாகனங்களில் சென்றவர்களும், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்த அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர், கூட்டத்தை விரட்டியடித்தனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி, ஒரே இடத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், கூட்டம் சேர்வதோ, முகக்கவசம் அணியாமல் இருப்பதோ, கடும் நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்படும் குற்றமாகும் என ஓட்டல் நிர்வாகத்துக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஓட்டல் உரிமையாளர் ஜாகிர் உசேன் மீது, கரோனா பரப்புதல், தனிமனித இடைவெளியின்றி கூட்டத்தைக் கூட்டுதல் என, கரோனா பரவல் தடைச் சட்டம், பிரிவு 188, 269, 270 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் கைது!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

Next Story

'5 பைசா ஆஃபர் பிரியாணி'-மக்கள் திரண்டதால் ஷட்டரை மூடிய கடைக்காரர் 

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 '5 paisa offer biryani'-shopkeeper closes shutters as crowd gathers

பெரும்பாலும் புதிதாகப் பிரியாணி கடைகள் திறக்கும் பொழுது 10 ரூபாய்க்கு ஒரு பிரியாணி அல்லது ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற நூதன விளம்பரங்களைப் பார்த்திருப்போம். கடை திறக்கும் நாளிலேயே மக்கள் கூட்டம் கடையில் அலைமோத வேண்டும் எனக் கடையின் உரிமையாளர்கள் இந்த நூதன முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஆனால் தற்பொழுதெல்லாம் இதைவிட மேலும் நூதனமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பிரியாணி கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கரூரில் 'திண்டுக்கல் பிரியாணி' என்ற புது பிரியாணி கடை திறக்கப்பட்டது. அறிமுக நாள் சலுகையாக ஒரு பைசா, 5 பைசா, பத்து பைசா உள்ளிட்ட செல்லாத நாணயங்களை கொண்டு வந்தால் பிரியாணி இலவசம் என விளம்பரப்படுத்தப்பட்டது.

செல்லாத காசுகள் மக்களிடம் இல்லாமல் இருக்கலாம் என கடை நிர்வாகம் நினைத்ததோ என்னவோ இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் அடுத்த நாள் காலையிலேயே செல்லாத ஐந்து பைசா, பத்து பைசா காசுகளுடன் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த வரவேற்பை எதிர்பாராத பிரியாணி கடையினர் மக்கள் கூட்டத்தை கண்டதும் 50 பேருக்கு மட்டும் பிரியாணி டோக்கனை கொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கடையின் ஷட்டரை  மூடிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.