குடத்தில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை- 10 ஆக உயர்ந்த உயிரிழப்பு!

10 lose their live related to sale of fake liquor in jugs

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மறுபுறம் கள்ளச்சாராயம் குடித்ததாலேயே நான்கு பேர் இறந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை மேற்கொண்டு வந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்றகோவிந்தராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும்அதிகரித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிகண்டன்(35), மேலும் பெண் ஒருவர், ஆண்கள் நான்கு பேர் என உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் குடத்தில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்கும் வீடியோ காட்சி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மொத்தமாக இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்; சுரேஷ், பிரவீன், சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா ஆகியோர் எனத் தெரியவருகிறது.

incident kallakurichi police
இதையும் படியுங்கள்
Subscribe