
கடலூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று (04.09.2020) நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூரில் இருந்து வேகமாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்துநிறுத்த முயன்றனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தைத் துரத்திச் சென்று கீழ்ப்பட்டாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதையடுத்து சந்தேகமடைந்த தனிப் பிரிவு காவலர்கள் வானத்தைச் சோதனை செய்தனர். அதில் காய்கறி மூட்டைகளுடன் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் 10 மூட்டைகள் மற்றும் 30 டிரேடுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நெல்லிக்குப்பம் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வாகனத்தை ஓட்டி வந்தது நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணகுமார்(43) என்பதும் உடன் வந்தவர் நெல்லிக்குப்பம் மெயின் ரோடு ஹாஜாமொகிதீன் மகன் முகமது ஷெரீப்(28)என்பதும் தெரியவந்தது. அதையடுத்து சரவணகுமார், முகமது ஷரீப் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் கடத்தி வந்த 10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்தப் போதைப் பொருட்கள் எங்கிருந்து? யாரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வரப்படுகிறது? எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)