/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1370.jpg)
சேலம் அருகே, தொழில் அதிபரிடம் 10 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த சிறப்பு எஸ்.ஐ. உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பழனி (36). நிதி நிறுவனம் நடத்திவருகிறார். இவரிடம், சேலம் அம்மாபேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த தறித்தொழிலாளி அண்ணாச்சி என்கிற பெரியசாமி என்பவர் குறைந்த விலைக்கு தங்கக்காசுகள் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய பழனி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு வந்து பெரியசாமியை ந்தித்தார். தங்கக் காசுகளை நேரில் பார்வையிட்ட அவர், தங்கக் காசுகளை 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்வதாகவும், ஓரிரு நாட்களில் பணத்துடன் வருவதாகவும் கூறிச்சென்றார்.
இதையடுத்து, நவ. 1ஆம் தேதியன்று 15 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு மீண்டும் சேலம் வந்தார். ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் உள்ள ஹோட்டலில் வைத்து பணத்தையும் தங்கக்காசுகளையும் கைம்மாற்றிக்கொள்ள முடிவு செய்திருந்தனர். அதன்படி பழனி, அந்த ஹோட்டல் அருகே நின்று கொண்டு, பத்து லட்சம் ரூபாயை எடுத்து எண்ணிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. சரவணன் (49), சேலம் மணக்காட்டைச் சேர்ந்த விஜயகுமார் (46) ஆகிய இருவரும் பழனியிடம் இருந்த பணத்தை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டனர். பணம் வேண்டுமானால் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2121.jpg)
இதனால் அதிர்ச்சியடைந்த பழனி, இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவுசெய்த தனிப்படை காவல்துறையினர், சிறப்பு எஸ்.ஐ. சரவணன், சங்ககிரியைச் சேர்ந்த பரணிதரன், அண்ணாச்சி என்கிற பெரியசாமி, இவருடைய மகன் ஜெகன் என்கிற ஜெகநாதன், பள்ளப்பட்டியைச் சேர்ந்த சங்கர், விஜயகுமார் (47) ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் விஜயகுமார், தன்னை ஒரு வழக்கறிஞர் என்று கூறி பலரிடம் மோசடி செய்து வந்திருப்பது தெரியவந்தது.
இந்த கும்பலிடமிருந்து 3 கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 15 லட்சம் ரூபாய், குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கும்பலை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Follow Us