
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வருபவர் நசீமா பேகம் (75) . கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ராமலிங்க நகர் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று மதியம் நசீமா பேகத்திற்கு ஃபோன் மூலம் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தகவல் கேள்விப்பட்டு உடனடியாக வீட்டிற்கு வந்த நசீமா பேகம் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் வந்து சோதனை செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.