/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/villupuram 600_3.jpg)
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திண்டிவனம் அடுத்த வட சிறுவலூரைச் சேர்ந்த சிங்காரம் என்ற விவசாயி தனது மனைவி ஜெயவேணி, மகன் விவேக், மருமகள் செல்வராணி, இவர்களின் ஒன்றரை வயது மகள் ஹேமலதா, ஆறு மாத குழந்தைலட்சுமி ஆகிய 6 பேரும் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்துத் தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது சிங்காரம், எனக்குச் சொந்தமான ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தை கொம்பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு 10 லட்சம் கடன் வாங்கினேன். இந்தத் தொகைக்கு தற்போது வட்டியாக மட்டும் 38 லட்சம் கேட்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த நபரின் ஆதரவாளர்கள் நிலத்திற்கு வந்து விவசாய பயிர்களையும் மின் மோட்டாரையும் சேதப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அவர்கள் அடிக்கடி எனக்குத் தொல்லை கொடுத்து வருவதால் என் குடும்பத்தினரோடு என்னால் ஊரில் வாழ முடியவில்லை. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளாததால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாகக் கூறினார். தனது புகார் மனுவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துச் சென்றுள்ளனர் சிங்காரம் குடும்பத்தினர்.
அடுத்து திண்டிவனம் கொடிமா கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் அவர்களைத்தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்களிடம் விஸ்வநாதன் கூறும்போது, எனக்கு ஊரில் வீடு கட்டி குடியிருக்க வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனுவை பரிசீலனை செய்து அதே இடத்தில் என் பெயருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் தனது மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த புகார்பெட்டியில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர் கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் இரு குடும்பத்தினர் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அலுவலக வளாகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)