Skip to main content

முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி கொலை குற்றவாளிகள் 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

10 arrested for murdering ex-panchayat leader's brother


கடலூர் அடுத்த தாழங்குடா பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி.  இவர் குண்டு உப்பலவாடியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். இவர் தம்பி மதிவாணன் (36). கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாசிலாமணியின் மனைவி பிரவீனா, அதே பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி சாந்தி ஆகியோர் போட்டியிட்டனர்.  சாந்தி வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக ஆனார். இந்த தேர்தல் காரணமாக இரு தரப்பினர் இடையேயும் முன்விரோதம் இருந்து வந்தது. அதையடுத்து கடந்த மாதம் மதிவாணன் கண்டக்காட்டிலிருந்து தாழங்குடா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் உருட்டுக்கட்டை,  அரிவாள், இரும்பு கம்பி,  கத்தி போன்ற ஆயுதங்களுடன் வழிமறித்தது. அதனால் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு மதிவாணன் தப்பி ஓடியபோது துரத்தி சென்று அரிவாளால்  சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. 

 

அதனைத்தொடர்ந்து  மதிவாணன் ஆதரவாளர்கள் தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மீன்பிடி படகுகள், வலைகுடோன்களுக்கு தீவைத்தனர். மேலும்  வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள், பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், மாருதி வேன், 5 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன.

 

இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மதிவாணனின் அண்ணனுமான மாசிலாமணி அளித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 15 பேரை கைது செய்தனர். அதேபோல் படகுகள், வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். 

 

இதனிடையே இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தங்கதுரை, வீரபாண்டியன், அரசகுமாரன், முகிலன், மதன், மதியழகன், வேலு சூர்யா, சிவசங்கர் இளவரசன் ஆகிய 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்,  புதுநகர் காவல் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உதயகுமார்  ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகாமூரிக்கு பரிந்துரை செய்தனர். அதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் சகாமூரி உத்தரவிட்டதை தொடர்ந்து  10 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

ஒரே கொலையில், ஒரே நாளில் 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 

 

Next Story

விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

The panchayat secretary was suspended for farmer incident

 

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (02.10.2023) காலை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் என பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கு இருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

அதே சமயம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.