இப்போதெல்லாம் விதிமுறைகளை கடைபிடிக்காத செயலுக்கு அரசு நிர்வாகம் விதிக்கும் அபராத தொகை என்பது விண்ணை தொடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன புதிய சட்டத்தில் மிகவும் நொந்து போய் சிரமத்திற்குள்ளானவர்கள் அதிகம் இரு சக்கர வாகன ஓட்டிகள் தான்.

Advertisment

1 lakh fine in erode

அதே போல் தான் எல்லா நிலைகளுக்குமான புதிய விதிகள் வகுக்கப்பட்டு விதி முறைப்படி ஏன் நடக்கவில்லை இந்தா புடி அபராதம் என அதிகாரிகள் களத்தில் இறங்கி விட்டார்கள். சுகாதாரமாக இருக்கவில்லை தேங்கிய நீரை ஏன் சுத்தப்படுத்தவில்லை என ஒரு ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஈரோட்டில் ஒரு லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட எல்.ஐ.சி.நகர், மூலப்பாளையம், தீரன் சின்னமலை வீதி நேதாஜி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் டெங்கு தடுப்புப் பணிக்கான ஆய்வினை மேற்கொண்டனர். அங்குள்ள வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சுகாதாரச் சீர்கேடு மற்றும் டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்கள்.

அப்போது ஹோட்டல் நடத்தும் தனசங்கர் என்பவர் உணவு தயாரிக்கும் நிலையம் சுகாதாரமற்ற முறையில் இருப்தும், அதில் டெங்கு கொசு உருவாகும் சூழல் உள்ளதும் அவர்கள் ஆய்வில் தெரியவந்தது. இந்த உணவு மையத்தில் மட்டன், சிக்கன் பிரியாணிகள் தயார் செய்யப்பட்டு ஈரோடு நகரின் பல்வேறு உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் உறுதியானது.

Advertisment

இதனை தொடர்ந்து இந்த உணவு தயாரிக்கும் நிலையத்தை சுகாதாரமாகப் பராமரிக்காததற்காக ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்க ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார். அதேபோல் அந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்ததால், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

மூன்று வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை. அதனால் இந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பைத் துண்டிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார். கலெக்டர் சி.கதிரவன் இது பற்றி கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில், வீடு, தொழிலகம், கடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்புப் பணிக்காக ஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஆட்சியர் செயல்பாட்டை பலரும் பாராட்டும் அதே வேளையில் மநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் இதையே காரணம் காட்டி ஆயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் என வீடுகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சென்று வசூலில் ஈடுபடுவதாகவும் பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.