/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/loan.jpg)
கல்விக்கடன் பெற தகுதியுள்ளவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்த வங்கி அதிகாரிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.
12ஆம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1017 மதிப்பெண்கள் பெற்ற திருவண்ணாமலை மாவட்ட ஆரணியை சேர்ந்த எஸ்.நவீன், சென்னை தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் சித்தா மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி படிப்பில் சேர்ந்துள்ளார். தனது படிப்புக்கு தேவையான கல்விக்கட்டணத்துக்கு கடன் கோரி 2016 மார்ச் 28ஆம் தேதி இந்தியன் வங்கி ஆரணி கிளையில் விண்ணப்பித்துள்ளார். அதை பரிசீலித்த வங்கி, அந்த கல்லூரியிலிருந்து படிப்பை முடித்து சென்றவர்கள் தொடர்பான விவரங்களை கல்லூரி பராமரிக்கவில்லை என்று கூறி நவீனின் விண்ணப்பத்தை 2016 அக்டோபர் 18ஆம் தேதி நிராகரித்தது.
தனது மனு நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரியும், தனக்கு கல்விக்கடன் வழங்க உத்தாவிடக்கோரியும் நவீன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வங்கி தரப்பில், இதுபோன்ற காரணத்துக்காக வருத்தம் தெரிவித்ததுடன், இனிவரும் காலங்களில், 2015 ஆண்டின் இந்திய வங்கிகள் சங்கத்தின் கல்விக்கடன் திட்டத்தின் விதிகளின்படி கல்விக்கடன் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தது.
இதனை ஏற்று, நவீனின் மனுவை மீண்டு பரீசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார். மேலும், கல்வியில் சிறந்து விளங்கின்ற மாணவனாக நவீன் இருக்கும் நிலையிலும், கடனை திருப்பி செலுத்துவதற்கான முழு தகுதி அவரது தந்தைக்கு உள்ளபோதிலும், வங்கி அதிகாரிகள் கல்விக்கடன் மறுத்ததை கண்டித்த நீதிபதி, இதுபோன்ற செயல்பாட்டிற்காக ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் வசூலிக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் இதுபோன்று இனி நடக்காது என வங்கி அளித்த உத்தரவாதத்தை ஏற்று, அபராதம் விதிக்காமல் வழக்கை முடித்துவைப்பதாக தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)