1 crore rupees to an oil dealer; Arrest of husband; Investigate the wife!

சேலத்தில், சமையல் எண்ணெய் வியாபாரியிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.

Advertisment

சேலம் செவ்வாய்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சையது ரஹ்மான் (50). இவர், செவ்வாய்பேட்டை பழைய சந்தையில் சமையல் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய கடையில் புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (45), அவருடைய மனைவி பவித்ரா (42) ஆகியோர் கடந்த 16 ஆண்டுகளாக செவ்வாய்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில், சையத் ரஹ்மான் தனது வரவுசெலவு கணக்கு விவரங்களை தணிக்கை செய்தார். அப்போது, 2005ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. வங்கிக்கு பணம் செலுத்தும் பணிகளில் கருணாகரனும், அவருடைய மனைவியும்தான் ஈடுபட்டு வந்தனர். அதனால் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் சையத் ரஹ்மான் விசாரித்தபோது, கணவனும்மனைவியும் சேர்ந்து சிறுகசிறுக ஒரு கோடி ரூபாய் வரை முறைகேடாக கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

தன்னிடம் இருந்து மோசடியாக கையாடல் செய்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, கணவனும்மனைவியும் சையத் ரஹ்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் திடீரென்று புதுச்சேரிக்கு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சையது ரஹ்மான்,சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். கணவன், மனைவி இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆய்வாளர் புஷ்பராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

Advertisment

புதுச்சேரிக்கு விரைந்த தனிப்படையினர், அங்கு தலைமறைவாக இருந்த கருணாகரனை கைது செய்தனர். அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவருடைய மனைவி பவித்ராவை பிடித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.