இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மாற்றத்திற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் முன்னேற்ற மசோதா (2025) தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது முத்த வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் இந்த மசோதா குறித்துப் பேசுகையில், “தனியார் கட்டுப்பாட்டின் கீழ் தேசியப் பாதுகாப்பு மற்றும் மனித உயிருடன் இந்த மசோதா விளையாடுகிறது.
சுற்றுச்சூழல் விளைவுகளுக்குச் சமமான ஆபத்தானவை இந்த முடிவு. கதிரியக்கக் கழிவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆபத்தானவை. இன்றும் கூட, இந்தியாவில் முழுமையாகப் பாதுகாப்பான நீண்டகால கழிவுகளை அகற்றும் வழிமுறை இல்லை. அதில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளும் அடங்கும். இந்த மசோதா, வரலாற்று அநீதிகளை முதலில் தீர்க்காமல் விரிவாக்கத்தை முன்மொழிகிறது. எனவே இது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பேசுகையில், “திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் பேசுகையில் அணுசக்தி தனியார்மயமாக்கல் பற்றிப் பேசினார். அப்போது அவர் சொன்ன மாநிலங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்த அவரது அக்கறையையும், நான் பாராட்டுகிறேன்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையும் மிகவும் முக்கியமான விஷயம், ஆகும். ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?. 2ஜிக்கு மேலே உள்ள ஒரே விஷயம் இதுதான் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” எனப் பேசினார். அப்போது அவைத் தலைவராக இருந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், “உறுப்பினர்கள் அனைவரும் இந்த மசோதா குறித்து மட்டுமே பேச வேண்டும்” எனத் தெரிவித்தார். அதே சமயம் தம்பிதுரையின் இந்த பேச்சுக்குத் திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநிலங்களவை அதிமுக - திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குச் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/wilson-thambidurai-2025-12-18-18-36-30.jpg)