'கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும்' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உயர்த்தி இருக்கும் குரல் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. தொடர்ந்து ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லி கிளம்பிய செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய அமைச்சர் அமித்ஷாவை, செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது பற்றித் தெரியாது. எனக்குத் தெரியாத ஒரு கருத்தை நான் சொல்ல விரும்பவில்லை. இந்த சந்திப்பிற்கு அழைத்ததாக அமித்ஷா என்னிடம் சொல்லவில்லை. நான் கூட இன்றைக்கு ஓட்டுப் போடும்போது அமித்ஷாவைப் பார்த்தேன். அப்போது இந்த சந்திப்பு குறித்து என்னிடம் அவர் சொல்லவில்லை. நானும் இது குறித்து அவரிடம் கேட்கவில்லை. அது தேவையில்லாத விஷயம். மற்ற கட்சிகள் செயல்படுவது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது. எங்களுடைய பொதுக்குழுவும், செயற்குழுவும் என்ன முடிவெடுக்குமோ அதன்படிதான் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்.
அவ்வளவுதான் சொல்ல முடியும். எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு எனக் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கும். அதுபோல ஒருவர் கட்சியில் இருக்கும்போது ஜனநாயக நாட்டிலே அந்தக் கட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவதுதான் அவர்கள் கடமையாக இருக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாடுதான் எங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் எங்களுக்குத் தந்த பாடம். அந்தப் பாடத்தின் அடிப்படையில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்றவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பது கட்சித் தலைமை தெரிந்து அதற்கேற்றாற்போல நடவடிக்கை எடுப்பார்கள். நான் சாதாரண தொண்டன் எனக்கு அதைப்பற்றி கருத்துச் சொல்வதற்கு எந்த உரிமையும் கிடையாது” எனத் தெரிவித்தார்.