தைப்பூச திருநாளை ஒட்டி முருகனின் அறுபடை வீடுகளிலும், மருதமலை முருகன் கோயிலும், சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பழனியில் வெகு விமரிசையாக நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடி சுமந்து பாதயாத்திரை வந்த பக்தர்கள்  வழிபாடு செய்தனர்.  

Advertisment

இந்நிலையில் பல்வேறு தலைவர்களும் தைப்பூச திருநாளுக்கு வாத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குடியரசுத் துணைத் தலைவர்  சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், “"அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும், இணை இன்றித் தான்உடையான் ஏந்திய வேல் அன்றே, பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம் மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள்வேலே" என வேல் ஏந்தி அதர்மத்தை அழித்துத் தர்மத்தை  நிலைநாட்டி எந்நாளும் நம்மை காத்தருளும் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துகள்.

Advertisment

தைப்பூச நன்னாளில் முருகன் அருளால் நாட்டில் அறியாமை என்னும் இருள் நீங்கி ஞான ஒளி பரவட்டும்,  தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகட்டும், வறுமை நீங்கி வளம் பெருகட்டும், கவலைகள் தீர்ந்து மக்கள் வாழ்வெல்லாம் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகி, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருள் என்றும் துணை நிற்க்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

l-murugan-speech

மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்-முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்..”. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த முதல் குடியாம் தமிழ்க் குடியின் ஆதி கடவுளாய், நாம் அன்போடு போற்றுகின்ற அருள்மிகு முருகப் பெருமானின் உகந்த தினமான ‘தைப்பூசம்’ திருநாள் வாழ்த்துகளை, உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற ‘வேல் யாத்திரை’ நிகழ்வின் போது, இத்திருநாளுக்கான அரசு விடுமுறையை பெற்றுத் தந்தோம் என்பதில் பெருமிதம் அடைகிறோம். மேலும், நம் மக்கள் அனைவருக்கும், அவரவர் நினைத்த நற்காரியங்களும், சகலவிதமான மகிழ்வோடு, அப்பன் முருகப் பெருமானின் அருளும் கிடைத்திட வேண்டுமென்று மனமார வேண்டிக் கொள்கிறேன். வெற்றிவேல்..! வீரவேல்..!” எனத் தெரிவித்துள்ளார். 

seeman-mic-2

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல் என வாழ்வியல் கூறுகள் வழி, நம் தமிழ் மொழி தந்த தொன்ம இலக்கியம் என யாவும் பெற்று பண்பாட்டு செழுமைமிக்க தமிழ்ப் பேரினத்தின் இறையோன் நம்மின மூதாதை முப்பாட்டன் முருகப்பெருமானாவார். தமிழர் பண்பாட்டு அசைவுகளைத் தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை நிலங்கள் முழுமையும் விரவியிருக்கும் இறைவனாக 
முப்பாட்டன் முருகப்பெருமான் திகழ்கிறார். 

உலகம் முழுமையும் எங்கெல்லாம் தமிழர்கள் பெருமளவு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முருகப்பெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறார். ஈழம், சிங்கப்பூர், மலேசியா, கனடா, இலண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு என எல்லா இடங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டு தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார்.‘பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகை காட்டும் முதுமொழியின்படி தொல்தமிழர் தங்கள் வாழ்வியல் பாடுகளின் மூலம் பெற்ற பண்பட்ட அனுபவங்களேதமிழர் பண்பாடாகியது. அப்படி நமது மூத்தோர் வழி பயணப்படுவது, மூத்தோர் வழி பாடுபடுவதே தனித்துவமிக்க தமிழர் மெய்யியல் வழிபாடாகும். அத்தகைய தமிழர் மெய்யியல் பண்பாட்டு நிகழ்வு சிறப்புறும் வகையில் திருமுருக வழிபாட்டுத் திருநாளான தைப்பூசப் பெருவிழாவினை உலகெங்கும் தாய்த்தமிழ் சொந்தங்கள் கொண்டாடி, தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன். தமிழ் இறைவன்! நம் முப்பாட்டன். திருமுருகப்பெருமமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம்!உலகத் தமிழர் அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். 

tvk-vijay-one-hand

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும். இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.