திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் கோவிந்தராஜு சுவாமி கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் அருகே உள்ள கடையில் நேற்று (02-07-25) நள்ளிரவு நேரத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவென எரிந்து அருகில் உள்ள பகுதிகளில் எல்லாம் பரவத் தொடங்கியது. மேலும், பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க அமைக்கப்பட்ட நிழற்பந்தலும் உடன் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கர தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்படி, இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்புத்துறையினர், கோயில் அருகே பற்றி எரிந்த தீயை போராடி அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், ஒரு கடை மற்றும் ஒரு கொட்டகை தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் திருப்பதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவிந்தராஜு சுவாமி கோயில் அருகே ஏற்பட்ட தீ விபத்து, இந்த ஆண்டு நகரத்தில் நடந்த இரண்டாவது பெரிய விபத்தாகும். ஜனவரி 8 ஆம் தேதி, வைகுண்ட ஏகாதசிக்காக வைகுண்ட துவார தரிசன டோக்கன்களுக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால், கூட்ட நெரிசலில் ஏற்பட்டு சுமார் ஆறு பேர் இறந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.