நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியின் பி.டி.மார்க் பகுதியில் பல மாடி பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடாளுமன்றத்தில் இருந்து 200 மீ தொலைவில் அமைந்துள்ள, இந்த குடியிருப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளில் ஒன்றாகும்.

Advertisment

இந்த நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளங்களில் ஒன்றில் இன்று திடீரென தீ பற்றி எரிந்தது. குடியிருப்பில் பற்றி எரிந்த தீ, மளமளவென பரவத் தொடங்கியுள்ளது. இதனால், குடியிருப்புவாசிகள் பதற்றமடைந்து அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாததால் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, தீ விபத்து நடந்து 30 நிமிடங்களாக எந்த தீயணைப்பு வாகனமும் வரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு வைத்துள்ளார். திரிணாமல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில், ‘டெல்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் மிகப்பெரிய தீ விபத்து. அனைத்து குடியிருப்பாளர்களும் ராஜ்யசபா எம்.பி.க்கள். கட்டிடம் நாடாளுமன்றத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. 30 நிமிடங்களிலிருந்து தீயணைப்பு படை இல்லை. தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. பலமுறை அழைப்பு விடுத்தும் தீயணைப்பு வாகனங்கள் காணவில்லை. டெல்லி அரசுக்கு கொஞ்சம் அவமானம்’ எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment