பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபை பதவிக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதி என இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகாபந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.
மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆட்சி அமைக்க குறைந்தது 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றன. குறிப்பாக நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 102 இடங்களிலும், பா.ஜ.க 101 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. இதற்கு பா.ஜ.க மறுப்பு தெரிவிப்பதால் கூட்டணி கட்சிகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே கடந்த 7ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு பா.ஜ.க மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. . குறிப்பாக இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி தனது கட்சிக்கு 15 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அதே போல், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான், தனது கட்சிக்கு 45 முதல் 54 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த கட்சிக்கு 20-25 இடங்களை மட்டுமே கொடுக்க பா.ஜ.க தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், 15 இடங்களை கொடுக்கவில்லை என்றால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி, அதிரடியாக அறிவித்தார். மத்தியிலும், பீகாரிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் அவர் இது குறித்து கூறியதாவது, “நாங்கள் அவமானப்படுத்தபட்டதாக உணர்வதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களிடம் பிரார்த்தனை செய்கிறோம். ஒரு கட்சியாக அங்கீகாரம் பெற எங்களுக்கு மரியாதைக்குரிய எண்ணிக்கையிலான இடங்கள் தேவை. எங்களுக்கு முன்மொழியப்பட்ட இடங்களின் எண்ணிக்கை கிடைக்கவில்லை என்றால் நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம். நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்போம், ஆனால் நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம்” என்று கூறினார். தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி தலைவர்கள் போர் கொடி தூக்கியிருப்பதால் நிதிஷ் குமார் மற்றும் பா.ஜ.கவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 110 தொகுதிகளில் போட்டியிட்டு 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிட்டு 43 இடங்களிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 7 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களிலும் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.