Tension in Pakistan due to spread of news Imran Khan assasinated in prison?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன்படி, இம்ரான் கான் பாகிஸ்தானில் உள்ளா அடியாலா சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், அடியாலா சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து பாகிஸ்தானில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சிறையில் இருக்கும் இம்ரான்கானை சந்திப்பதற்காக அவரின் சகோதரிகள் சிறைக்குச் சென்றுள்ளனர். ஆனால், இம்ரான்கானை சந்திப்பதற்கு அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த சூழலில், இம்ரான்கான் சிறையிலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவலை ஆப்கானிஸ்தானின் உள்ள சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி பாகிஸ்தான் முழுவதும் பரவியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில், தாங்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இம்ரான்கான் நலமுடன் இருந்தால் ஏன் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம் என்ற இம்ரான்கானின் சகோதரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இம்ரான்கான் உடல்நலம் குறித்து பாகிஸ்தான் அரசு எந்தவித அதிகாரப்பூர்வ எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இம்ரான்கான் இருக்கும் அடியாலா சிறை முன்பு ஆயிரக்கணக்கானோர் தற்போது கூடியிருப்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Follow Us