tension at the Kerala-Karnataka border for language issue
கேரளாவில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பினராயி விஜயன் அம்மாநிலத்தின் முதமைச்சராக பொறுப்பி வகித்து வருகிறார். இந்த நிலையில், பினராயி விஜயன் தலைமையிலான அரசும் முன்மொழியப்பட்ட மலையாள மொழி மசோதா, 2025 ஒன்றினை தாக்கல் செய்தது. இந்த மசோதா கேரளாவில், மலையாள மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தது. இது கேரளாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளத்தை முதல் மொழியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கேரள அரசு இதை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், கன்னடம் போன்ற பிற மொழி வழிப் பள்ளிகளிலும் கூட, 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அமல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மசோதா, காசர்கோடு உட்பட எல்லைப் பகுதிகளில் வசிக்கும் கன்னடம் பேசும் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள், இந்த மசோதா தங்களின் மொழியுரிமைகளைப் பாதிக்கும் என்று அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. கன்னடம் பேசும் மாணவர்கள் மீது இது கூடுதல் கல்விச் சுமையை ஏற்படுத்தும் என்றும், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என்று, கவலை தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.அதோடு மட்டுமல்லாமல், அப்பகுதியின் கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் என்று கல்வி வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் கன்னட மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எல்லைப் பகுதிகளில் உள்ள கன்னட மக்கள், தற்போது கன்னட மொழியை முதன்மை பயிற்று மொழியாக உள்ள பகுதிகளிலும் கூட, மலையாளத்தை கட்டாய முதல் மொழியாகத் திணிக்க கேரள அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஒன்றிய அரசு இந்தியைத் திணிப்பதற்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் மீண்டும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா இடையே முன்மொழியப்பட்ட மலையாள மொழி மசோதா 2025 தொடர்பாக மொழிப் பிரச்சினை உருவாகியுள்ளது.
இதன் நீட்சியாக, கர்நாடக எல்லைப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (KBADA) ஒரு தூதுக்குழு, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து, சர்ச்சைக்குரிய மசோதாவில் தலையிட்டு அதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. இந்த மசோதாவை முழுமையாக மறுபரிசீலனை செய்வதாக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உறுதியளித்துள்ளதாக கர்நாடக எல்லைப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், இந்தியாவின் ஒற்றுமையானது ஒவ்வொரு மொழியையும் மதிப்பதிலும், ஒரு குடிமகனும் தனது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையிலுமே இருக்கிறது என்றும், மேலும், முன்மொழியப்பட்ட மலையாள மொழி மசோதா-2025 மூலமாக எல்லைப் பகுதியில் வாழும் மக்களின் கலவி மற்றும் யதார்த்த வாழ்க்கையின் மீது தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றும் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, கேரள அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
Follow Us