தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மூன்றாவது கட்டமாக இன்று (27-09-25) நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை விஜய் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லில் எல்லைப் பகுதியான எம்.களத்தூர் பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பிரச்சார பேருந்திற்கு மாறினார். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பா.ஜ.க என யாரையும் விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பிரச்சாரம் செய்யும் இடமான வேலுச்சாமிபுரத்திலும், தொண்டர்கள் உற்சாகம் குறையாமல் மாலை முதல் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு விஜய், பரப்புரைத் திடலுக்கு வந்தார். அப்போது, விஜய், விஜய், தவெக, தவெக என கூட்டத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர், வாகனத்தின் மேல் ஏறி நின்று தொண்டர்கள் மத்தியில் விஜய் உரையாற்றி அங்கிருந்துச் சென்றார்.
இந்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பரப்புரையில் பங்கேற்ற 10 பேர் உயிரிழந்ததாகவும் 2 குழந்தைகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகமாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த செந்தில் பாலாஜி, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்து சிகிச்சைப் பெறுபவர்களிடம் நடத்தி வருகிறார். இதனிடையே, கரூரில் மருத்துவமனையை தயார் நிலையை வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதால் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஸ் ஆகியோர் கரூருக்கு விரைந்துள்ளனர். மேலும், சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் அரசு மருத்துவமனைக்கு கரூருக்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே, கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை தூக்கிச்செல்ல ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளதால் கரூர் அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்து உயிரிழந்து வருவதாக வெளியாகும் தகவலால் கரூர் மாவட்டமே கூக்குரலாக இருக்கிறது.