Tension as Hindu organizations engage in clash for Karthigai Deepam lit in Thiruparankundram
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய 2 வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. இந்த மலையில், 2 வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளதால், மலை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘இந்தாண்டு கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் உள்ள தீபத் தூணில் அல்லாமல் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இது ஏற்றத்தக்கது அல்ல. திருப்பரங்குன்றம் மலையில் காலம் காலமாக மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. எனவே அதற்கான அறிவிப்பை நீதிமன்றம் உறுதி செய்து ஒரு உத்தரவாக வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரும் ஒரு மனுதாரராக இணைத்து வழக்கை இன்று தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை, வக்ஃப் வாரியம், அரசு தரப்பு என பல்வேறு தரப்பின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கார்த்திகை திருநாளின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும். அதற்கான முழுமையான பாதுகாப்பை மதுரை மாநகர காவல்துறை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு மனு இன்று (03-12-25) மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடன் தீபத்தூணில் மனுதாரர் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருநாளான இன்று (03-12-25) மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் கோயில் நிர்வாகம் கார்த்திகை தீபத்தை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர், நீதிமன்ற உத்தரவுப்படி தூணில் தீபம் ஏற்றவில்லை என்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை உடைத்து மலை மீறி ஏற முயற்சி செய்ததால் அங்கு இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளில் பலருக்கு காயம் ஏற்பட்டது. நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தற்போது வரை தீபம் ஏற்றபடாததாலும், போலீசாருடன் இந்து அமைப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளதாலும் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
Follow Us