கோவிலுக்குள் மத கோஷங்களை எழுப்பி சிலைகளை தாக்கிய நபரை, கிராம மக்கள் சிலர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கபீர் மொண்டல். இவர் பெங்களூருவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (28-10-25) காலை மராத்தஹள்ளிக்கு அருகிலுள்ள தேவரபீசனஹள்ளியில் உள்ள வேணுகோபால் கோவிலுக்குள் கபீர் மொண்டல் சென்றுள்ளார்.

Advertisment

காலணிகளை அணிந்தபடியே சென்ற அவர், மத கோஷங்களை கூச்சலிட்டு கோவிலுக்குள்  நுழைந்துள்ளார். அதன் பின்னர் அவர், தனது காலணிகளை எடுத்து கோயில் நுழைவாயில் உள்ள சிலைகளைத் தாக்க முயன்றுள்ளார். மேலும், கல்களை கொண்டு சிலைகள் மீது எறிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கோயிலை அழிப்பதாகவும் அவர் மிரட்டியுள்ளார். கபீர் மொண்டலின் செயல்களைக் கவனித்த அங்குள்ள மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் போலீசார் வரும் வரை, அவரை ஊர் மக்கள் சிலர் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது மத்திய அரசும், மாநில அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட கபீர் மொண்டலை மீட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கபீர் மொண்டலை தாக்கியவர்கள் மீதும் தனியாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் தேசியம் மற்றும் குடியேற்ற நிலையைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருவதாகவும், அவரது செயலுக்கான நோக்கம் என்ன என்பதையும் விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோயில் சிலைகளை காலணிகளால் தாக்கிய சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Advertisment